ஜோகூர் பாரு, டிச 27 – ஜோகூர் பாரு ஜாலான் பந்தாயில் தனது காருக்கு வழித்தடத்தை வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஆடவர் ஒருவர் தைவான் பெண்ணின் காரை சேதப்படுத்தியுள்ளார்.
நேற்று மாலையில் அந்த நபரின் துரோகச் செயலைக் காட்டும் வீடியோவை x தளத்தில் போலீஸ்துறை கண்டறிந்ததை அடுத்து, இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை மணி 1.53 அளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவுப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.
ஜாலான் பந்தாயில் சந்தேக நபர் ஒருவர் தனது காரை சேதப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட 35 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த காரின் முன் கதவு (pintu hadapan), முன் போனட் , கூரை, முன்புற கண்ணாடி மற்றும் முன் புறம் பக்கத்தில் உள்ள கண்ணாடி ஆகியவை சேதமடைந்ததாக ரவுப் செலமாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 38 வயதான ஆடவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமையன்று Bukit Senyum பகுதியில் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேகநபர் போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றப் பதிவுகளை கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 427 வது விதியின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த ஆடவர் டிசம்பர் 24 ஆம்தேதி தொடங்கி டிசம்பர் 29ஆம்தேதிவரை ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரவுப் செலமாட் ( Raub Selamat ) கூறினார்.