
ஜோகூர் பாரு, ஜன 23 – தனியார் நிறுவனத்தின் திட்ட நிர்வாகி ஒருவர்
இல்லாத முதலீடு திட்டத்தில் சேமித்த கிட்டத்தட்ட 140,000 ரிங்கிட்டை இழந்தார். கூடுதலான வருமானம் கிடைக்கும் என வழங்கப்பட்ட வாக்குறுதியை நம்பி அந்த முதலீடு திட்டத்தில் சேமித்த தனது பணத்தை இழந்து விட்டதாக உள்நாட்டைச் சேர்ந்த 37 வயது ஆடவரிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார். பிரபலமான வங்கியின் பணியாளர் என்று கூறிக்கொண்ட தனிப்பட்ட நபர் ஒருவர் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னிடம் தொடர்பு கொண்டு கோலாலம்பூர் பங்கு பர்வர்த்தனையில் பங்கு முதலீடு செய்தால் 20 விழுக்காடு லாபம் கிடைக்கும் என தெரிவித்ததோடு அது தொடர்பான வாட்சாப் குழுமத்திலும் தம்மை இணைத்தாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதிவரை சந்தேக பேர்வழி தெரிவித்த வங்கி கணக்கிற்கு 30 முறை மொத்தம் 138,300 ரிங்கிட்டை அந்த நிர்வாகி பட்டுவாடா செய்துள்ளார். இம்மாத தொடக்கத்தில் பங்கு மதிப்பு வீழ்ச்சி கண்டுவிட்டதால் வாட்சாப் முதலீட்டு குழுமத்திலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக சந்தேகப் நபர் தெரிவித்ததோடு அவருடனான தொடர்பையும் துண்டித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து தாம் மோசடிக்கு உள்ளானதாக உணர்ந்து பாதிக்கப்பட்டவர் புகார் செய்ததால் தண்டனை சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் சொஹாய்மி கூறினார்.