Latestமலேசியா

ஜோகூர் பாரு சாலையில் 3 வாரங்களாக ‘பேயாக’ பயமுறுத்தி வந்த பெண் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19, ஜோகூர் பாரு, Jalan Austin Heights Utama-வில் 3 வாரங்களாக பேய் போல் வேடமணிந்து சாலையில் வரும் போகும் வாகனகங்களை பயமுறுத்தி வந்த பெண், ஒருவழியாக போலீசிடம் பிடிபட்டுள்ளார்.

ஜூலை 27-ஆம் தேதி வீடியோ வைரலானது முதல் தேடப்பட்டு வந்த 31 வயது அப்பெண், சனிக்கிழமை இரவு அதே இடத்தில் வைத்து கைதானார்.

எனினும், வீடற்றவரான அப்பெண் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுவதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் (Raub Selamat) கூறினார்.

இதனால், நேற்று காலை அவர் மனநலப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்; தற்போது அதன் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ரவூப் சொன்னார்.

அச்சாலையில், இரவு நேரங்களில் பேய் உடையில் சுற்றுவதோடு, திடீர் திடீரென வாகனங்கள் முன்பு பாய்வதும், அவற்றை காலால் உதைப்பதுமாக இருப்பவர், பின்னர் ஏதோ தாம் தான் மோதப்பட்டது போல விழுந்து பாசாங்கும் செய்வார்.

பிறகு சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளிடம் இழப்பீடு என்ற பெயரில் அவர் மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

அவரின் ‘பேய் நாடகத்தால்’ பாதிக்கப்பட்டவர்கள் போலீசிஸ் புகார் செய்து விசாரணைக்கு உதவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அப்பெண் கைதாகியிருப்பதால், அப்பகுதியில் இரவு நேரங்களில் இனி பொது மக்கள் பயமின்றி பயணம் செய்யலாமென ரவூப் உத்தரவாதமளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!