கோலாலம்பூர், நவம்பர்-18, ஜோகூர் பாலத்தில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், வர்த்தக வாகனங்களின் பாதையை வூட்லண்ட்ஸ் நிலையத்திலிருந்து துவாஸுக்கு மாற்றுவது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
எனினும் இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
மலேசியா சார்பில் போக்குவரத்து அமைச்சு சிங்கப்பூருடன் அது குறித்து விவாதிக்கும் என்றார் அவர்.
ஜோகூர் பாலத்தில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் 52 திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அவற்றில் 22 திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
ஜோகூர் பாலத்தை ஒரு நாளைக்கு 400,000 பேர் பயன்படுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் அவ்வெண்ணிக்கை 17 விழுக்காடு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
எனவே அங்கு நெரிசலைக் குறைத்து போக்குவரத்தைச் சுமூகமாக்குவது அவசியமென அமைச்சர் சொன்னார்.