ஜோகூர் பூப்பந்து விளையாட்டுத் தூதர் பதவி குறித்து லீ ச்சொங் வெய்யுடன் துங்கு இஸ்மாயில் சந்திப்பு

ஜோகூர் பாரு, மார்ச்-19 – தேசியப் பூப்பந்து சகாப்தம் டத்தோ லீ ச்சொங் வெய், நேற்று ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவர்களை மரியாதை நிமித்தம் நேரில் சென்றுகண்டார்.
ஜோகூர் மாநில பூப்பந்து விளையாட்டின் தூதராக ச்சொங் வெயை நியமிக்கும் பரிந்துரை தொடர்பில் அச்சந்திப்பு நடைபெற்றதாக அறியப்படுகிறது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் கா’சியும் அச்சந்திப்பில் உடனிருந்தார்.
TMJ-வுடனான அச்சந்திப்புக்குப் பிறகு, டத்தோ லீ ச்சொங் வெயும், ஓன் ஹஃபிஸும், அந்த தூதர் பொறுப்புக் குறித்து மேற்கொண்டு கலந்துபேசியதாகத் தெரிகிறது.
3 முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வெற்றியாளரான ச்சொங் வெயின் அந்நியமனம், மாநிலத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால், உலகத் தரம் வாய்ந்த நட்சத்திர விளையாட்டு வீரர்களுடன் இணைந்து ச்சொங் வெய் தூதராக வலம் வருவார்.
நியூ சிலாந்து All-Blacks ரக்பி அணியின் முன்னாள் நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் Tim Cahill உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர்.
ஜோகூரில் கால்பந்து மட்டுமல்லாமல் பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, ரக்பி என எல்லா விளையாட்டுகளையும் தரமுயர்த்துவதே தனது குறிக்கோள் என துங்கு இஸ்மாயில் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.