கோலாலம்பூர், ஆகஸ்ட்-18 – செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) போட்டியிடாது.
மாறாக தேசிய முன்னணியே (BN) அங்கு போட்டியிட இணக்கம் காணப்பட்டிருப்பதாக, PH பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) அறிக்கையில் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற PH உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் அம்முடிவெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நடப்பில் தொகுதி யார் வசம் உள்ளதோ, அவர்களே தேர்தலில் போட்டியிடுவதென்ற கூட்டு இணக்கத்தின் அடிப்படையில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கோத்தா இடைத்தேர்தலில் PH கூட்டணியின் உறுப்புக் கட்சியான அமானா போட்டியிட வேண்டுமென குளுவாங் அமானா இளைஞர் பிரிவு வலியுறுத்தியதால், முன்னதாக சலசலப்பு ஏற்பட்டது.
தேசிய முன்னணியின் தொகுதியை PH மதிக்க வேண்டுமென அம்னோ தலைவர்களும் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.