ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை குறித்து புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர் ஆர்தர் சீயோங் (Arthur Chiong) முன்மொழிந்தார்.
ஜோகூர் மாநிலத்தின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியில் இந்தியச் சமூகம் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.
ஆனால், தங்கள் கலாச்சார விழாக்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடமின்மையின் காரணமாக இந்தியர்கள் அடிக்கடி சவால்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், உயர் வாடகைச் செலவுகள், பொதுச் சீர்மிகு மண்டபங்களின் பற்றக்குறை போன்ற இந்தியச் சமூகத்தினர் எதிர்நோக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண மாநில அரசுக்கு அவர் வலியுறுத்தினார்.
கார் பார்க்கிங், மின்சாரம், நீர் ஆகிய அடிப்படை வசதிகளுடன், ஜோகூர் மாநிலத்தில் குறிப்பாக, இந்தியச் சமூகம் அதிகமாக இருக்கும் பகுதிகளான கூலாய், புக்கிட் பத்து மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தத் திட்டம் தனியார் துறையின் சமூகப் பொறுப்பு முயற்சிகளின் வழியாகவும், மாநில பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குவதாலும் விரைவாக நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார், அவர்.
இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபத்தை அமைப்பது அவர்கள் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், சமூக ஒற்றுமையை உருவாக்கவும், அவர்களுடைய தேவைகளை முன்னிலைப்படுத்தவும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என்று பி.கே.ஆர்ரின் புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினரான ஆர்த்தர் சீயோங் தெரிவித்தார்.