ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 21 – ஜார்ஜ்டவுன், ஜாலான் புர்மாவில் (Jalan Burma) உள்ள நியூ வேர்ல்ட் பார்க் (New World Park) உணவுக் கடைகளில் கரப்பான் பூச்சிகள் மேய்ந்ததைத் தொடர்ந்து, அக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டன.
அதிரடி சோதனையில், அக்கடைகளில் உணவுப் பொருட்கள் சேமிக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும், அழுக்கான துண்டுகள், க்ரீஸ் மற்றும் மோசமான நிலையிலான சமையல் உபகரணங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அச்சோதனையின் போது, சில வியாபாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளைப் பார்த்ததும், அடுப்பின் தீயை கூட அணைக்காமல் கடையை விட்டு ஓடிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
டைபாய்டு (typhoid) தடுப்பூசிகள், உணவு கையாளுதல் பயிற்சியின்மை மற்றும் காலாவதியான, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்தல் உள்ளிட்ட விதி மீறல்களைத் தொடர்ந்து, அந்த 28 உணவுக் கடைகள், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டன.