
குவாந்தான், மே 27 “டத்தோஸ்ரீ“ விருதை வாங்கித் தருவதாக தொலைபேசி வழி கூறிய அனாமதேய நபரின் ஆசை வார்த்தையில் மயங்கிய குத்தகையாளர் ஒருவர் 571,000 ரிங்கிட்டை பறிகொடுததார். 63 வயதுடைய அந்த குத்தகையாளரை தொடர்பு கொண்ட ஒரு நபர், தன்னை பகாங் அரண்மனையின் உயரிய விருதுகள் வழங்கும் பணிக்கு பொறுப்பான அதிகாரி எனக் கூறிக் கொண்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஓத்மான் கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த விருதைப் பெறுவதற்கு தம்முடன் தன் சகாக்கள் நால்வரையும் பரிந்துரைத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் குத்தகையாளரை பல முறை தொடர்பு கொண்டு நன்கொடைகளைப் பெற்றுள்ளார்.
அந்த நபர் வழங்கிய 5 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 571,000 வெள்ளியை 32 தடவை அந்த குத்தகையாளர் கட்டங்க கட்டமாக மாற்றியுள்ளார் என டத்தோ யாஹ்யா கூறினார். மிகப்பெரிய தொகையை ஒப்படைத்தப் பின்னரே இந்த விருதின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் கொண்ட அந்த குத்தகையாளர் குவாந்தான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இது குறித்து நேற்று புகார் செய்தார் என யஹ்யா தெரிவித்தார்.