
கோலாலம்பூர் – நவ 9 -சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக்கிற்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக அவருக்கு ஒரு மாதத்திற்குள் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து மலேசியர்கள் ஒன்றிணைத்து, கூட்டு நிதியளிப்பு முயற்சியில் பங்கேற்று ராமசாமிக்கு உதவவேண்டுமென கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.
ஸாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கில் ராமசாமி தோல்வியடைந்ததை அடுத்து, நவம்பர் 2ஆம் தேதி தமிழர் குரல் அரசு சாரா அமைப்பினால் தொடங்கப்பட்ட நிதி திரட்டும் முயற்சியினால் நேற்றைய நிலவரப்படி சுமார் 1.3 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளதாக சாண்டியாகோ கூறினார். இந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளிக்கு முன்னதாக 1.52 மில்லியன் ரிங்கிட் நிதியை நாங்கள் அடைந்துவிடுவோம் என நம்புகிறோம். ராமசாமி தனது உயிரைப் பணயம் வைத்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அனைத்து மலேசியர்களும் நிதி திரட்டும் நடவடிக்கைக்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்கி உதவும்படி பெட்டாலிங் ஜெயாவில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் உடன் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது சார்லஸ் சாண்டியாகோ வலியுறுத்தினார்.