கோலாலம்பூர், ஜூலை 5 – ம.இ.கா முன்னாள் துணை தலைவர் டான் ஶ்ரீ சுப்ரமணியத்தின் மறைவு கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு என்றும் இச்சமயத்தில் அன்னாரின் குடும்பத்துக்கு குறிப்பாக அவரின் துணைவியார் புவான் ஶ்ரீ தீனா அவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ம.இ.கா-வின் தலைவரும் தெற்காசிய நாடுகளுக்கான தூதருமான டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சுப்ரமணியம் அவர்கள் மலாயா பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அவரை அடையாளம் கண்டு அரசியலுக்கு கொண்டு வந்தவர் டான் ஶ்ரீ மாணிக்கவாசகம். அதன் பிறகு சுப்பிரமணியம் பல்வேறு நிலைகளில் ம.இ.கா-விற்கும் நாட்டிற்கும் தமது சிறந்த சேவையை வழங்கியதாக விக்னேஸ்வரன் வணக்கம் மலேசியாவிடம் நினைவு கூர்ந்தார்.
அவர் ஒரு நல்ல தலைவர். அனைவரோடும் அன்பாக பழகக்கூடியவர். அதுவே அவரின் தனித்துவமாகவும் இருந்தது. தமது தந்தை சன்னாசியும் சுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் எனக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன் அவர்கள் இருவரும் எல்லா காலகட்டங்களிலும் தொடர்ந்து தங்களின் நட்பை பேணி வந்ததாக கூறினார்.
தாம் ம.இ.கா-வின் இளைஞர் பகுதியில் பொறுப்பு வகித்த போது அன்னாரோடு ஒரு தலைவர் தொண்டர் எனும் அடிப்படையில் அணுக்கமாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததாகக் தெரிவித்தார். அன்னாரின் மறைவு நிச்சயமாக கட்சிக்கும் சமூகத்துக்கும் பெரிய இழப்பு என வருத்ததோடு மீண்டும் தெரிவித்தார் விக்னேஸ்வரன்.