டாம் குரூஸ் சாகசத்துடன் கோலாகலமாக நிறைவுற்ற பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா; அமெரிக்கா முதலிடம்
பாரீஸ், ஆகஸ்ட்-12 – பிரபல ஹோலிவூட் நடிகர் டாம் குரூஸின் (Tom Cruise) சாகசங்களுடன் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.
ஜூலை 26-ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் போட்டி மலேசிய நேரப்படி இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது.
தொடக்க விழா போன்று நதிக்கரை ஓரமாக அல்லாமல்,
நிறைவு விழா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
உச்சக்கட்டமாக ஹோலிவூட் நடிகர் டாம் குரூஸ் அரங்கின் மேற்கூரையிலிருந்து குதித்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அதன் பிறகு விளையாட்டாளர்களுடன் கைக்குலுக்கியும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டவர், ஒலிம்பிக் கொடியை ஏந்தி மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்தார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறுவதன் அடையாளமாக ஒலிம்பிக் கொடியுடன் அவர் அரங்கிலிருந்து விடைபெற்றார்.
டாம் குரூசின் உலகப் புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபிள் (Mission Impossible) படத்தின் பல முக்கியக் காட்சிகள் பாரீசில் எடுக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக, 62 வயது குரூஸ் நிறைவு விழாவில் பங்கேற்றார்.
ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 40 தங்கப் பதக்கங்களுடன் அமெரிக்கா ஒட்டுமொத்த வெற்றியாளரான வேளை கடும் போட்டிக்குப்பிறகு சீனா இரண்டாவதாக வந்தது.
முதல் தங்கப் பதக்கக் கனவோடு சென்ற மலேசிய அணி, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டாளர்களுடன் போராடி 2 வெண்கலப் பதக்கங்களுடன் நாடு திரும்புகிறது.