கோலாலம்பூர், டிசம்பர்-16 – அல்புஹாரி அறக்கட்டளைக்கான வரி விலக்கு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கில், லிம் குவான் எங்கிற்கு இரு கட்டங்களாக இழப்பீட்டுத் தொகையை வழங்க, தான் ஸ்ரீ முஹிடின் யாசின் உத்தரவிடப்பட்டுள்ளார்.
அந்த முன்னாள் பிரதமர் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி 400,000 ரிங்கிட்டையும், பாக்கி 1 மில்லியன் ரிங்கிட்டை ஜனவரி 27-ஆம் தேதியும் செலுத்த வேண்டுமென, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரை, குவான் எங்கிற்கு இழப்பீடு வழங்கும் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி முன்னதாக முஹிடின் மனு செய்திருந்தார்.
1.4 மில்லியன் என்பது ஒரு பெரியத் தொகையென்றும், அதனைத் திரட்ட தமக்கு கால அவகாசம் வேண்டுமென்றும் அவர் நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.
அவ்விண்ணப்பத்தை இன்று ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இரு கட்டங்களாக இழப்பீட்டை வழங்க வேண்டுமென நிபந்தனை விதித்தது.
வழக்கில் தோற்றதால் தனக்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தராமல் இழுத்தடிக்கும் முஹிடினை திவாலானவராக அறிவிக்கக் கோரி, டிசம்பர் 9-ஆம் தேதி குவான் எங் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.
அல்புஹாரி அறக்கட்டளையின் வரி விலக்கு இரத்து தொடர்பில், முன்னாள் நிதியமைச்சருமான குவான் எங்கிற்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டதில் முஹிடின் குற்றவாளியே என நவம்பர் 8-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.