கோலாலம்பூர், மே 10 – அண்மைய சில காலமாக அதிகரித்து வரும், “டிஜிட்டல் பைரசி” எனப்படும் உள்ளூர் உள்ளடக்கத்தை உள்ளடக்கிய சட்டவிரோத திருட்டு பிரச்சனையை எதிர்கொள்ள, அரசாங்கத்துக்கு டெலிகிராம் செயலி உதவும்.
கடந்த சில மாதங்களாக, தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும், அந்த செயலி நிர்வாகத்திற்கும் இடையில் நடத்தப்பட்ட இருவழி சந்திப்புகள் வாயிலாக அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக, தொடப்பு துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் தெரிவித்தார்.
டிஜிட்டல் பைரசி தொடர்பில் தொடர்ந்து புகார்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன. குறிப்பாக, டெலிகிராம் வாயிலாக சட்டவிரோதமாக உள்ளடக்கங்கள் பகிரப்படுவது தொடர்பில், முக்கியமான ஆஸ்ட்ரோவிடமிருந்து அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதை பாஹ்மி சுட்டிக் காட்டினார்.
அது போன்ற சம்பவங்களை தடுக்க, பதிப்புரிமை உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொடர்பு பல்லூடக ஆணைய அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
அதனால், அப்பிரச்சனைக்கு தீர்வுக் காண முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என டெலிகிராம் கூறியுள்ளதாக பாஹ்மி சொன்னார்.
முன்னதாக, தனது அண்மைய வெளியீடான குன்சாவை (KHUNSA) டெலிகிராமில் எளிதாகப் பார்க்க முடிந்ததாக, அந்நாடகத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஷாருலேசாத் முஹமடின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்ததை தொடர்ந்து, டெலிகிராம் அப்ளிகேஷன் வாயிலாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் திருட்டு நடவடிக்கைகள் விவாதத்தை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.