Latestமலேசியா

கோத்தா திங்கியில் கைதான வங்காளதேச தொழிலாளர்களுக்கு மனிதவள அமைச்சு உதவும்

கோலாலம்பூர், டிச 26 – முகவர்களால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படும் ஜோகூர், கோத்தா திங்கியைச் சேர்ந்த 171 வங்காளதேச தொழிலாளர்களுக்கு மனித வள அமைச்சு உதவும் என அதன் அமைச்சர் Steven Sim தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி தரகர்கள் தங்களை ஏமாற்றியதால் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக கோத்தா திங்கி போலீஸ் நிலையத்திற்கு 171 வங்காளதேசிகள் புகார் அளிப்பதற்காக கூட்டமாக நடந்து சென்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். டிசம்பர் 20 ஆம் தேதி நடந்த அந்த சம்பவத்தின்போது அன்றைய தினம் மலேசிய ஆயுதப் படைகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டதாக கோத்தா திங்கி போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் ஹுசைன் சமோரா கூறியிருந்தார். அந்த வங்காளதேச ஆடவர்கள் தங்கிய விடுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயு டமாய் போலீஸ் நிலையத்தை நோக்கி சென்ற பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அந்த வங்காளதேசிகளின் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள முதலாளிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் விசாரணைக்கு உதவும் பொருட்டு இவ்வாரம் அழைக்கப்பட்டிருப்பதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார். மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட வங்காளதேசிகளுக்கு தமது அமைச்சு உதவும் என ஸ்டீவன் சிம் கூறினார். இந்த விவகாரத்தில் குற்றவாளி என கண்டுப்பிடிக்கப்படுவோருக்கு எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என அவர் கூறினார்.

உள்நாட்டு வர்த்தகத்திற்கு தேவையான ஆதரவை வழங்கும் நோக்கத்திற்குத்தான் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனரே தவிர அவர்களை வைத்து ஆதாயம் பெற நினைக்ககூடாது என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக ஸ்டீவன் சிம் கூறினார். வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கும் கொள்கையை மேம்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷனை தாம் சந்தித்து விவாதிக்கவிருப்பதாகவும் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!