புதுடெல்லி, ஏப் 7 – இந்திய தலைநகர் புதுடில்லியில் புதிதாக பிறந்த குழந்தைகளை கடத்தி அவற்றை நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்கும் கும்பலை இந்திய அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இந்த கடத்தல் தொடர்பாக இந்திய தலைநகர் புதுடில்லி முழுவதும் பல இடங்களில் இந்தியாவின் மத்திய புலனாய்வு பிரிவான சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் கேசவ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் புதிதாக பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டன.
அந்த குழந்தைகளை கறுப்புச் சந்தையில் வாங்கி விற்கும் கும்பலைச் சேர்ந்த பெண் மற்றும் வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை டெல்லி வட்டாரத்திற்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. புதுடில்லி முழுவதும் ஏழு முதல் எட்டு குழந்தைகளை கடத்துவதில் கைதான நபர்களில் மருத்துவமனை வார்டு ஊழியர் மற்றும் பல பெண்களும் அடங்குவர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் விற்கப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.