Latestஉலகம்

டுரியானுடன் பேருந்தில் ஏறிய பயணி ; மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேருந்து பணியாளர்

தாய்லாந்து, செப்டம்பர் 14 – தாய்லாந்தில், பழங்களின் அரசனாக கருதப்படும் டுரியானுடன் பேருந்தில் ஏறிய பயணி ஒருவரால், பணியில் இருந்த பேருந்து உதவிப் பணியாளர், மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், அச்சம்பவத்தை அவரே தமது முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அது வைரலாகியிருப்பது தான்.

டுரியான் வாசத்தை நுகர்ந்தால் தமக்கு ஒவ்வாமை ஏற்படும் என்பதால், பயணி பேருந்துக்குள் அப்பழத்தை கொண்டு வந்ததும், தாம் மூச்சு விட சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக, குஸ்ஸாம் ஸ்ரீசோங் (Kussam Srisong) எனும் அந்த பெண் பணியாளர் பதிவிட்டுள்ளார்.

குஸ்ஸாம் மயங்கி பேருந்து இருக்கையில் விழுந்து கிடக்கும் புகைப்படங்களும், அவருக்கு இருவர் உதவும் புகைப்படங்களும் அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தால் பேருந்து பயணம் தாமதமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஸ்ஸாம் பின்னர் குணமடைந்து வேலைக்குத் திரும்பினார்.

தாய்லாந்தில், மிகுந்த வாசம் காரணமாக டுரியான்களைப் பொது போக்குவரத்து சேவைகளில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!