
ஆக் 5- Tesla நிறுவனத்தின் தலைவர் Elon Musk, அது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியதை டுவிட்டர் உறுதிப்படுத்தியது. இவ்வாண்டு தொடக்கத்தில் நான்காயிரத்து 400 கோடி அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கும் உடன்படிக்கையின் Elon கையெழுத்திட்டார்.
அந்த உடன்படிக்கை படி கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, Elon அந்த கடிதத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியதாக, டுவிட்டர் தெரிவித்தது. அதன் வாயிலாக, டுவிட்டரின் பங்குகள் தலா 54.20 டாலருக்கு பரிவர்த்தனை செய்யப்படும்.
அந்த தகவல் வெளியானதும், டுவிட்டர் பங்குகளின் விலை 12.7 விழுக்காடாக உயர்வு கண்ட வேளை, அதற்கு எதிர்மறையாக Tesla நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு சரிந்தன. இவ்வாண்டு ஜூலை மாதம், டுவிட்டரை வாங்கும் உடன்படிக்கையை இரத்து செய்வதாக Elon அறிவித்தார். டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகளின் எண்ணிக்கை குறித்து தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக கூறி Elon உடன்படிக்கையை இரத்து செய்வதாக தெரிவித்தார்.
அதனை மறுத்த டுவிட்டர் Elon Musk-க்கு எதிராக வழக்கு தொடுத்தது. இம்மாதம் 17-ஆம் தேதி அந்த வழக்கு விசாரணை செவிமடுக்கப்படவுள்ள வேளை, தற்போது உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்ள Elon இணக்கம் தெரிவித்துள்ளார். அதே சமயம், தமக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.