டெங்கில், செப்டம்பர் -1, சிலாங்கூர், டெங்கில் தமிழ்ப்பள்ளியின் வெள்ளப் பிரச்னை 20 ஆண்டுகளாக ஒரு நிரந்த தீர்வில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
மழைக்காலத்தின் போது அடிக்கடி வெள்ளமேற்படுவதால் அப்பள்ளியில் கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்களிடமும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
சில நேரங்களில் வெள்ள நீர் மட்டம் நெஞ்சளவுக்கு இருப்பதால், பள்ளியின் நடப்புச் சூழல் மாணவர்களுக்கு இனியும் பாதுகாப்பானதாக இல்லையென பெற்றோர்கள் கவலையுடன் கூறினர்.
பள்ளியில் பாலர் வகுப்பு உள்ளிட்ட சில வகுப்புகள், கட்டடம் இல்லாமல் கொள்கலனில் (cabin) இயங்கி வரும் அவலத்தையும் காண முடிகிறது.
பள்ளி மாணவர்கள் வெள்ளத்தால் அவதிப்பட வேண்டுமென்பது என்ன தலையெழுத்தா என சமூக ஆர்வலர் M.வெற்றிவேலன் கேள்வி எழுப்பினார்.
உண்மை நிலவரத்தைக் கண்டறிய அவர் தலைமையில் தமிழ்க் கல்வி கூட்டமைப்பு அண்மையில் அப்பள்ளிக்கு நுழைய முற்பட்ட போதும், மாவட்ட கல்வி இலாகாவால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
எனவே, இந்த வெள்ளப் பிரச்னைக்கு தீர்வாக, டெங்கில் தமிழ்ப்பள்ளிக்கு அரசாங்கம் உடனடியாக புதியக் கட்டடமொன்ற வாங்கித் தர வேண்டும்;
இல்லையேல் மாற்று இடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் (Fadillah Yusof) சீக்கிரமே அதில் தலையிட்டு, டெங்கில் தமிழ்ப்பள்ளி வெள்ளத்தில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.