
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – “டெலிவரி ரைடர்கள்” அல்லது பொருட்களை அனுப்பும் ஓட்டுனர்களின் வேலை அவ்வளவு எளிதானது அல்ல.
வெயில் – மழை பாராமல் ஓடும் அவர்கள் பல சமயங்களில், வாடிக்கையாளர்களின் கடுமையான பேச்சுகள் அல்லது முரட்டுத்தனமான நடவடிக்கைகளைக் கூட சமாளிக்க வேண்டியுள்ளது.
அண்மையில், டெலிவரி சேவையின் போது, பழுதடைந்திருந்ததால் வாடிக்கையாளர் பெற்றுக் கொள்ள மறுத்த கேக்கை, கிராப் ஓட்டுனர் ஒருவர் தாமே சாப்பிடும் காணொளியை, அவரது மனைவி டிக் டொக்கில் பதிவிட்டதை தொடர்ந்து, அது வைரலாகி இணைய பயனர்களின் அனுதாபத்தைப் பெற்று வருகிறது.
சிறிதளவு மட்டுமே சேதமடைந்திருந்த அந்த கேக்கை, வாடிக்கையாளர் பெற்றுக் கொள்ள மறுத்ததோடு, அதற்கான முழு பணத்தையும் திரும்ப தருமாறும் கோரியதாக, முஹமட் பட்சில் எனும் அந்த பகுதி நேர கிராப் ஓட்டுனரின் மனைவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேரங்காடி ஒன்றில் இருக்கும் கடையிலிருந்து வாங்கப்பட்ட அந்த கேக்கை, வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் போது, அதன் மேல் அலங்காரம் சிறிதளவு சேதமடைந்திருந்தது.
அந்த கேக்கின் விலை வெறும் 60 ரிங்கிட் என்ற போதிலும், மாதம் கடைசி கையில் பணம் இல்லாததால், சகோதரியிடம் கடன் வாங்கி அந்த பணத்தை அவர் கொடுத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்து அந்த கேக்கைத் தூக்கி வீச மணம் இன்றி அதனை அவர் உட்கொண்டுள்ளார்.
அந்த பதிவு இணையவாசிகளின் அனுதாபத்தை பெற்று வருகிறது.
“கேக் சேதமடைய கூடாது என்றால் சொந்தமாக போய் வாங்கி வர வேண்டும். மோட்டார் சைக்கிளில் அனுபப்படும் கேக் சில சமயங்களில் சிறிதளவு சேதமடைவது வழக்கம் தான்” என ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“அது அந்த வாடிக்கையாளரின் தவறு” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கிராப் மலேசியாவும் அந்த காணொளியின் கீழ் பதிவிட்டுள்ளது. “உங்கள் கணவர் எதிர்கொண்ட அந்த சூழலுக்காக வருந்துகிறோம். அவரது விவரங்களைத் தாருங்கள். எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம்” என கிராப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.