கோலாலம்பூர், மே 13 – கார் ஓட்டுனர் ஒருவர் மோட்டார் சைக்கிளோட்டியை இடித்து தள்ளிய சம்பவத்தை பொதுமக்கள் கடுமையாக சாடினர். சாலையில் சென்று கொண்டிருந்த அந்த கார் திடீரென வழித்தடத்திலிருந்து மாறி அந்த மோட்டார் சைக்கிளோட்டியை இடித்த அந்த சம்பவத்தை இண்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட காணொளியில் பகிரப்பட்டது. இதற்கு முன்னதாக அந்த காருக்கு பின்னால் வந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி காரின் ஜன்னல் ஓரத்திலுள்ள கண்ணாடியை இடித்துவிட்டு முந்திச் சென்றார். இதனால் ஆத்திரத்திற்கு உள்ளான அந்த கார் ஓட்டுனர் திடீரென தமது வழிதடத்தை மாற்றி அந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதால் அவர் கீழே விழுந்தார்.
எனினும் அந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. சாலையில் அந்த கார் ஓட்டுனரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் விட்டுக்கொடுக்காத போக்கை கொண்டிருந்தது குறித்து சாலையை பயன்படுத்தும் பெரும்பாலோர் அந்த இருவரையும் குறைகூறினர். இந்த சம்பவத்தை பார்த்தாவது மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்ற கார்களின் ஜன்னல் கண்ணாடிகளை மோதிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என சில நெட்டிசன்கள் தெரிவித்தனர்.