
கோலாலம்பூர், ஏப்ரல்-3- உலகத் தங்க விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு அடுத்த சில மாதங்களில் கிராமுக்கு 500 ரிங்கிட்டை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைத்தன்மையற்ற புவிசார் அரசியல், தொடரும் பணவீக்கம், உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவை அதற்குக் காரணமாகும். குறிப்பாக சீன நாட்டு மத்திய வங்கி தங்கத்தை வாங்கிக் குவிப்பதில் படு தீவிரமாக உள்ளதாக, MGA எனப்படும் மலேசியத் தங்கச் சங்கத் தலைவர் டத்தோ லூயிஸ் இங் கூறினார்.
இதனால் நாட்டின் தங்க இருப்பு அதிகரித்து சந்தையில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விலைமதிப்புள்ள அந்த உலோகத்தின் விலை உயர்வுக்கும் வித்திடுகிறது.அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையும் இங்கே ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது; குறிப்பாக, தங்க இறக்குமதி வரி பற்றிய கவலையால் லண்டனிலிருந்து நியூ யோர்க்கிற்கு தங்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இச்சூழ்நிலையானது, உலகளாவிய வர்த்தகத்தின் இயக்கவியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தங்கத்தின் விலை உயர்வுக்கு பங்களிப்பதாக லூயிஸ் கூறினார். பணவீக்க அழுத்தம் மற்றும் மத்திய ரிசர்வ் வட்டி விகிதங்களில் எதிர்பார்க்கப்படும் சரிவு ஆகியவையும் சேர்ந்து, தங்கத்தை மிகவும் கவர்ச்சிகரமான, அதுவும் நாணய மதிப்பு சரிவுக்கு எதிரான முதலீட்டுத் தேர்வாக உருவாக்கியுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை முதலீடு செய்வது மதிப்புள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்றார் அவர். MGA-வைப் பொறுத்தவரை, குறிப்பாக நீண்ட கால முதலீடுகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்க வேண்டும்.
“ஒருவேளை பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் அல்லது பொருளாதாரம் நிச்சயமற்றதாக இருந்தால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது; காரணம் மதிப்பு குறையும் அபாயத்தில் உள்ள நாணயங்களை விட தங்கம் பாதுகாப்பானது என லூயிஸ் சொன்னார்.
என்றாலும், திடீர் விலை திருத்தம் இழப்பில் போய் முடியலாமென்பதால், குறுகிய கால முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.