கோலாலம்பூர், பிப் 7 – நாட்டில் தடுப்புக் காவலில் ஏற்படும் ஒவ்வொரு மரண சம்பவங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சட்டத்துறை தலைவருக்கு ( CAGED ) எனப்படும் அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாண்டின் முதல் ஐந்து வாரங்களில் தடுப்புக் காவலில் ஏழு மரணங்கள் நடந்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் சட்டத்துறை தலைவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என காணாமல்போனவர்களுக்கு எதிரான பிரஜைகள் என்ற CAGED அமைப்பு வலியுறுதியுள்ளது.
தடுப்பு காவல் மரணங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கபப்பட வேண்டும். தடுப்புக் காவல் தொடர்பான ஒரு மரணத்தில் இரண்டு கைதிகளும் இரண்டு அதிகாரிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவு ஜனவரி 20 ஆம் தேதி முடிவடைந்தது. அவர்களில் எவர் மீதாவது குற்றஞ்சாட்டப்பட்டதா? அல்லது தடுப்புக் காவலில் மரணம் அடைந்த இதர அறுவர் விவகாரத்தில்கூட எவராவது சந்தேகப் பேர்வழிகள் என அடையாளம் காணப்பட்டனரா என்றும் அந்த அந்த அரசு சார்பற்ற இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
போலீஸ் தடுப்புக் காவலில் ஏற்படும் ஒவ்வொரு மரணச் சம்பவங்கள் குறித்தும் அரச மலேசிய போலீஸ் மரண விசாரணைக்கு கோரிக்கை எழுப்ப வேண்டும். குற்றவியல் சட்டத்தின் 334 ஆவது விதிமுறையின்படி மரண விசாரணை நடத்துவது கட்டாயமாகும். ஆனால் இந்த விவகாரத்தில் தொடரும் மெத்தனப் போக்கு உடனடியாக ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அந்த இயக்கம் கோரிக்கை விடுத்தது.