கோலாலம்பூர், மார்ச் 3 – 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை தடுப்புக் காவலில் மரணம் அடைந்தவர்கள் தொடர்பாக 27 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று விசாரணைகளில் மேல் நடவடிக்கை எதுவும் இல்லையென வகைப்படுத்தப்பட்டதாக பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் Ong Kian Ming எழுப்பிய எழுத்துப் பூர்வமாக கேள்விக்கு பதில் அளித்தபோது உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதர ஆறு விசாரணைகளில் தற்போது மரண விசாரணைக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்புக் காவல் தொடர்பான இதர எட்டு விசாரணைகள் இன்னம் அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது.
மேலும் 10 விசாரணைகள் ரசாயண மற்றும் சவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக உள்துறை அமைச்சு விவரித்துள்ளது. எனினும் போலீஸ் தடுப்புக் காவலில் நடைபெற்றுவரும் மரணச் சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சு கவலை அடைகிறது.
நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட போலீஸ் லக்காப் மற்றும் மாநில போலீஸ் தலைமையங்களில் தடுப்புக் கைதிகளை கண்காணிப்பதற்காக 684 ரகசிய கண்காணிப்பு கருவிகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.