கோலாலம்பூர், பிப் 21 – கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 18 நாட்களிலே தங்களின் 13 வயது மகன் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளது.
அந்த காணொளியில், ஆரோக்கியமான தங்களது மகனான ரெவ்னெஷ் குமார் (Revnesh Kumar) கராத்தே வகுப்புக்குச் செல்லும் வழியில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து மரணமடைந்ததாக, புத்ராஜெயாவைச் சேர்ந்த பெற்றோரான நரேஷ் குமாரும் விஜயராணி கோவிந்தனும் கூறியுள்ளனர்.
தங்களது மகனின் இறப்பு சான்றிதழில், இறப்புக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும், ஆய்வக விசாரணைக்காக காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என , பெற்றோர் கூறியுள்ளனர்.
காஜாங் மருத்துவமனையில் அந்த சிறுவன் இறந்தது உறுதிப்படுத்தப்பட்ட வேளை, இறப்புக்கான காரணம் தெரிய 6 மாதங்கள் வரை காத்திருக்கும்படியும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சம்பந்தப்பட்ட அந்த காணொளி தற்போது சமூகத்தில் ஒரு பீதியை ஏற்படுத்தியிருப்பதோடு, பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெற்றோர்களிடையே தயக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதால், அந்த சிறுவனின் இறப்பு குறித்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, மனித உரிமை அமைப்பான மலேசிய தமிழர் முன்னேற்ற கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.