கோலாலம்பூர், மார்ச் – கோவிட் தடுப்பூசி போட்ட மூன்று வாரங்களுக்கும் குறைவான கால கட்டத்தில் தனது மகன் இறந்திருப்பதாகக் கூறியிருக்கும் 13 வயது இளைஞர் ரெவ்னெஷ் குமாரின் பெற்றோரை நாளை சந்திக்கவிருப்பதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
அந்த இளைஞரின் இறப்பு தொடர்பான ரசாயனத் துறையின் அறிக்கையை இன்று தாம் பெற்றுள்ளதாகவும், அந்த விபரம் அவ்விளைஞரின் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளப்படுமென்றாரவர்.
நாளை, ரெவ்னெஷ் குமாரின் பெற்றோரை எனது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளேன். அவர்களது மகனின் இறப்பு குறித்த விபரத்தை பொதுவில் வெளியிடுவதற்கு முன்பாக, பெற்றோரிடம் அத்தகவலை முதலில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன் என கைரி குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 16 -ஆம் தேதி, கராத்தே வகுப்புக்கு செல்லும் வழியில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ரெவ்னேஷ் குமார், பின்னர் காஜாங் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வேளையில், ரெவ்னேஷின் இறப்புக்கான காரணம் குறித்த அறிக்கை தாமதமாக வெளியிடப்படுவதாக கூறப்படுவதை அமைச்சர் மறுத்தார். அவ்விவகாரத்தில் சவப் பரிசோதனை அறிக்கை மட்டும் போதுமானதல்ல. ரெவ்னேஷின் இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய முழுமையான விசாரணையை மேற்கொள்வது அவசியமாக இருந்ததாக கைரி குறிப்பிட்டார்.