
பெய்ஜிங், மார்ச் 31 – தனது எதிர்காலத்திற்கு எடுக்க வேண்டிய எந்தவொரு முடிவுகளையும் மற்றவர்கள் உத்தரவிடுவதை மலேசியா அனுமதிக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சுதந்திரமான நாடு என்ற முறையில் தனது இறையாண்மை மலேசியா எப்போதும் தற்காக்கும் என்பதோடு நாட்டிற்காக சிறந்த முடிவுகளை எடுக்கும் என அவர் கூறினார். நாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு எவரும் கூற வேண்டியதில்லை. எங்களுக்கு எது சிறந்தது என்பதை நாங்கள் முடிவு செய்வோம். தீர்வையற்ற மற்றும் நடுநிலைமையான மண்டலமாக ஆசியான் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆசியானில் எங்களது நிலையை நாங்கள் தற்காத்துக் கொள்வோம் என பிரதமர் தெரிவித்தார்.
பெய்ஜிங்கில் Tsinghua பல்கலைக்கழகத்தில் பொது விரிவுரை ஆற்றிய அன்வார், சீனாவிற்கும் அமெரிக்காவுக்குமிடையே தற்போது எற்பட்டுள்ள போட்டா போட்டி மற்றும் பதட்ட நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோது இதனை தெரிவித்தார். சீனாவின் ஆதரவாளராக தாம் பார்க்கப்பட்டபோதிலும் வர்த்தக நாடு என்ற முறையில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் சிறந்த நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு மலேசியா விரும்புவதாக அவர் தெளிவுப்படுத்தினார்.