
குவந்தான், நவ 20 – தனித்து வாழும் தாய் ஒருவர் காதல் மோசடி திட்டத்தில் 170,400 ரிங்கிட்டை இழந்தார். சமூக வலைத் திட்டத்தின் மூலம் அறிமுகமான தனிப்பட்ட நபரினால் 40 வயதுடைய பெண் பணத்தை இழந்ததாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார். கடந்த மாதம்இன்ஸ்டாகிராம் மூலம் தமக்கு அறிமுகமான நபர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்ததோடு அரசு ஊழியருமான அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் பிறகு மருத்துவமனை சிகிச்சையில் இருந்ததால் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறி அப்பெண்ணிடம் அந்த ஆடவர் 1,500 ரிங்கிட்டை கைமாற்றாக வாங்கியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு காரணங்களை கூறியதால் 170,400 ரிங்கிட்டை அப்பெண் அந்த ஆடவருக்கு வழங்கியுள்ளார். இறுதியில் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அப்பெண் இது குறித்து பென்தொங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்திருப்பதாக யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.