பத்து பஹாட், நவம்பர்-19, ஜோகூர், யொங் பெங்கில் ‘பேய் வேட்டைக்காக’ கைவிடப்பட்ட கட்டடத்தில் அத்துமீறியக் குற்றச்சாட்டை, 20 வயது இளைஞன் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளான்.
புக்கிட் பாசீரில் 47 வயது ஆடவருக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.36 மணிக்கு அத்துமீறியதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
அமானுஷ்ய சடங்குகளைச் செய்வதற்காகத் தான், அங்கே சென்றதாக Muhamad Zainudin Asaron யொங் பெங்க் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறினான்.
உண்மையில் நண்பர்களுடன் பேசி வைத்து தான் அங்கு சென்றதாகவும், ஆனால் கடைசியில் அவர்கள் வராமல் ஏமாற்றி விட்டதாகவும் அவன் சொன்னான்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், அவ்விளைஞனுக்கு அதிகபட்சமாக 6 மாத சிறை மற்றும் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.
எனினும் இளம் குற்றவாளி என்பதை கருத்தில் கொண்டு, டிசம்பர் 23-ஆம் தேதியன்று சமூக நல அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பிறகே தண்டனை முடிவாகுமென நீதிபதி தெரிவித்தார்.