கோலாலம்பூர், ஆகஸ்ட்-17, தனது அடையாளங்களைப் பயன்படுத்தி டெலிகிராமில் (Telegram) மோசடி சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பில், டத்தோ பட்டத்தைக் கொண்ட 49 வயது ஆடவர் அந்த சமூக ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
32 அனாமதேய டெலிகிராம் கணக்குகள் தனது பெயரில் இயங்குவது கண்டு அதிர்ச்சியடைந்ததாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவுச் செய்த வழக்கில் பொருளாதார ஆய்வாளரும் நிதி நிர்வாகியுமான டத்தோ மொஹமட் நஸ்ரி கான் அடாம் (Datuk Mohd Nazri Khan Adam) குறிப்பிட்டுள்ளார்.
எனக்கே தெரியாத முதலீட்டு திட்டங்கள் பற்றி என்னை ஏராளமானோர் அழைத்து கேட்ட போது தான் சந்தேகம் வந்தது.
என் பெயரிலான அந்த போலி கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை முடக்குமாறு கடிதம் அனுப்பியும் டெலிகிராம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே நீதிமன்றத்தின் உதவியை நாடுவதாக அவர் சொன்னார்.
நான் ஆயிரக்கணக்கில் முதலீட்டு திட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளேன்; Astro Awani ஊடகத்திலும் பேட்டிகளை வழங்கியுள்ளேன்.
இப்படியிருக்க, Telegram-மில் என் பெயரில் மேற்கொள்ளப்படும் ஆள் மாறாட்டங்களால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு, நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாக்கப்படுகிறது என டத்தோ நஸ்ரி கூறிக் கொண்டார்.
வழக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.