
நியூயார்க் , ஜன 30- மோசமான பொருளாதார சூழல் காரணமாக, கூகுள் நிறுவனத்தின் சுமார் 12 ஆயிரம் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ததோடு நில்லாமல், தாம் உட்பட இதர உயர் அதிகாரிகளின் சம்பளம், ஊக்குவிப்புத் தொகை ஆகியவற்றையும் கணிசமான அளவு குறைத்துக் கொள்ள, கூகுள் தலைமை செயல்முறை அதிகாரி சுந்தர் பிச்சை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கூகுள் உயர் அதிகாரிகளின் வருடாந்திர போனஸ் ஊக்குவிப்புத் தொகை கணிசமான அளவு குறைக்கப்படுமென, அவர் கோடிகாட்டியுள்ளார்.
எனினும், சம்பளத்தில் எத்தனை விழுக்காடு பிடித்தம் செய்யப்படும், எவ்வளவு நாள் அது நீடிக்கும் என்பது குறித்து அவர் கூறவில்லை.
2020-ஆம் ஆண்டு வரையிலான கூகுள் நிறுவனத்தின் கோப்புப்படி, சுந்தர் பிச்சையின் வருடாந்திர சம்பளம் 20 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். கடந்தண்டு அவரது மொத்த சொத்துகளின் மதிப்பு 20 விழுக்காடு சரிவு கண்டு ஐயாயிரத்து 300 கோடியாக பதிவானதும் குறிப்பிடத்தக்கது.