Latestமலேசியா

எல் நினோ வறட்சியை எதிர்நோக்க சிலாங்கூர் 9 மாதங்களுக்கு நீர் கையிருப்பு உள்ளது

ஷா அலாம் , பிப் 8- இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் எல்-நினோ பருவநிலை மாற்றத்தின் காரணமாக நீண்ட காலத்திற்கு வறட்சி ஏற்படும் சாத்தியத்தை எதிர் கொள்ளவதற்கு 9 மாதங்களுக்கு சிலாங்கூரில் நீர் கையிருப்பு இருப்பதாக அடிப்படை வசதி மற்றும் விவசாயத்திற்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியியலாளர் இஸாம் ஹாஷிம் தெரிவித்திருக்கிறார்.

ஆறு மாதங்களுக்குத் தேவையான நீரைச் சேகரித்து வைக்கும் ஆற்றலை மாநிலத்திலுள்ள நீர்த் தேக்கங்கள் கொண்டுள்ள வேளையில் கூடுதல் பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு குளங்களில் உள்ள நீர் மேலும் மூன்று மாதங்களுக்கான தேவையை ஈடு செய்யும் என்று அவர் கூறினார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் தொடர்ச்சியான நீர் விநியோகத்தை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று கிள்ளான் ஆற்று நீர் பாதுகாப்புத் திட்டப் பகுதிக்கு இன்று பணி நிமித்த வருகை புரிந்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கடைசியாக வறட்சி ஏற்பட்டது. பருவநிலை மாற்ற சுழற்சி மறுபடியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தின் அளவைக் குறைப்பதற்காக முன்னேற்பாடுகளை இப்போது முதற்கொண்டே மேற்கொண்டு வருகிறோம் என இஸாம் ஹாஷிம் கூறினார். .

இந்நோக்கத்தின் அடிப்படையில் வறட்சி உள்பட எல்லாச் சூழல்களிலும் சிலாங்கூரில் சுத்தமான நீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய பல்வேறு முன்னெடுப்புகளை மாநில அரசு எடுத்துள்ளதோடு பல திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!