
சென்னை , ஜன 27 – இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என் ரவி நடத்திய தேநீர் விருந்து நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்துகொண்ட போதிலும் அவரது கூட்டணி கட்சிகள் அந்த விருந்தை புறக்கணித்தன. சபாநாயகர் அப்பாவு, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி , வேலு ஆகிய அமைச்சர்களும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர். தமிழக அரசுக்கும் கவர்னர் ஆர்.என் ரவிக்குமிடையே அண்மைய சில நாட்களாக ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அந்த விருந்தில் கலந்துகொண்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் குடியரசு தின விழாவுக்கு வந்த கவர்னரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்முகத்தோடு வரவேற்றார். எற்கனவே கவர்னர் நடத்திய பொங்கல் விழா விருந்தை மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.