Latestமலேசியா

தமிழ்ப் பள்ளிகளில் தீயணைப்புப் பயிற்சிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன? தீயணைப்பு வீரர் கேள்வி

கோலாலம்பூர், ஏப்ரல்-13, ஆபத்து அவசர வேளைகளில் விரைந்து செயல்பட ஏதுவாக, பார்க்கப் போனால் பள்ளிகளில் தீயணைப்புப் பயிற்சிகள் ஆண்டுதோறும் வழக்கமாக்கப்பட வேண்டும்.

ஆனால், அதன் முக்கியத்துவத்தை எல்லா கல்வி நிறுவனங்களும், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

தீயணைப்புத் தயார் நிலை குறித்து இன்னமும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகளுக்கு உரிய தகவல்களும் பயிற்சிகளும் போய் சேரவில்லை என, பேராக் தீயணைப்பு -மீட்புத் துறையின் தீ பாதுகாப்புப் பிரிவின் துணை அமுலாக்க அதிகாரியான ஹேமநாதன் சுப்ரமணியம் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

பேராக்கில் கடந்தாண்டு ஒரு தமிழ்ப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்தே, தமிழ்ப் பள்ளிகளில் இந்த தீயணைப்புப் பயிற்சிகளை தீவிரப்படுத்தும் யோசனைத் தோன்றியது.

பல பள்ளிகளை விசாரித்ததில், மாணவர்களுக்கு குறிப்பாக 7 முதல் 9 வயது மாணவர்களுக்கு மலாய் மொழி புரியாததால், தீயணைப்புப் பயிற்சிகள் பற்றி பள்ளி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை என தெரிய வந்தது.

இதையடுத்தே தமிழ் மொழியில் தீயணைப்புப் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டம் உருவானதாக ஹேமநாதன் விவரித்தார்.

எனவே தமிழில் தீயணைப்புப் பயிற்சிகள் தேவைப்படும் பள்ளிகளில் தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்ப நடைமுறைகள் சரியான வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் என்றார் அவர்.

தமிழ்ப் பள்ளிகளுடனான தொடர்பை எளிதாக்க இந்திய தீயணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் அதிக விழிப்புணர்வும் விரிவான அணுகுமுறையும் இருந்தால், விரும்பத்தகாத பேரழிவு ஏற்படும் போது அதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என ஹேமநாதன் சொன்னார்.

பிரச்னைக்கான தீர்வுக்கு நாம் வழிகாட்டியுள்ளோம்; அதனைப் பயன்படுத்திக் கொள்வதும் கொள்ளாததும் பள்ளி நிர்வாகங்களைப் பொருத்தது.

வரவேற்பைப் பொருத்தே நாடளாவிய நிலையில் தமிழில் தீயணைப்புப் பயிற்சிகள் தொடரும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!