
நாட்டிலுள்ள பள்ளிகளில் கூடுதல் மொழியாக தமிழ் போதிக்கப்பப்பட ஆவனச் செய்ய பரிந்துரைத்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மின் நிலைப்பாட்டை ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்.
தாம் ஏற்கனவே கடந்த காலங்களில் தமிழ் மொழி தேசிய மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கட்டாயப் பாடமாக கொண்டுவரப் பட வேண்டும் என வலியுறுத்தி வந்ததை நினைவுகூர்ந்த அவர் பிரதமர் செய்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியூட்டுவதாக கூறினார். தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அதனை கூட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் அதே பட்சத்தில் தொன்மைமிக்க மொழியான தமிழ் மொழிக்கு நாட்டில் இன்னும் பரவலான பயன்பாட்டை உருவாக்க அது எல்லா பள்ளிகளிலும் ஒரு கட்டாய பாடமாக்குவது அவசியம் என்பதே தங்களின் நிலையாக இருந்து வருவதாக விக்னேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் போர்டிக்சனில் நடந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அந்த வகையில் அரசாங்கத்திடம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க ம.இ.கா தொடர்ந்து வலியுறுத்தும் என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.