கூச்சிங், பிப் 27 – தமிழ் , சீனப் பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள் , முதலாம் படிவத்திற்கு செல்ல , பள்ளி நிலையிலான மதிப்பீட்டில் மலாய் மொழியில் 4-லிருந்து 6 வரையிலான தேர்ச்சி நிலையைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த புதிய நடைமுறை இவ்வாண்டிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது. உள்ளூர் சீன ஊடகமொன்று கல்வியமைச்சு வெளியிட்டிருக்கும் அப்புதிய நடைமுறை அடங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்த்து செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த புதிய நடைமுறையின் கீழ், 1-லிருந்து 3 வரையிலான தேர்ச்சி நிலையைப் பெறும் மாணவர்கள் UPLBM எனப்படும் மலாய் மொழி மதிப்பீட்டு எழுத்தறிவுத் தேர்வை எடுக்க வேண்டும். அந்த தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடிப்படை வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வேளையில், UPLBM -மலாய் மொழி மதிப்பீட்டு எழுத்தறிவுத் தேர்வு பிப்ரவரி 14 -ஆம் தேதி முதல் அனைத்து சீன – தமிழ் ஆரம்பப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு விட்டது என்பது தெரிய வந்துள்ளது. புதிய பள்ளித் தவணை மார்ச் 21-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே இந்த UPLBM தேர்வு குறித்து கருத்துரைத்த கல்வி துணையமைச்சர் செனட்டர் டத்தோ மா ஹங் சூன், அந்த தேர்வு மாணவர்களை கஷ்டப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். மாணவர்களிடையே மலாய் மொழி ஆற்றலை வலுப்படுத்தவே அந்த தேர்வு என குறிப்பிட்டுள்ளார்.
மலாய் மொழியில் குறைந்த மதிப்பெண்ணை பெறும் மாணவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படுவதற்காகவே UPLBM தேர்வு நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.