
கோலாலம்பூர், ஜன , 22- தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு கல்வியமைச்சு முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்று ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு அப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு படிநிலைக்கும் குறைந்தபட்சம் ஒரு கூடுதல் வகுப்பறை இருக்க வேண்டும் என்ற கல்வியமைச்சின் விதிமுறை அப்பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
நாடு தழுவிய நிலையில் இருக்கும் 530 தமிழ்ப்பள்ளிகளில் 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒரு வகுப்பறை மட்டுமே இருக்கிறது.
இதனால் இருமொழி பாடத்திட்டதில் அப்பள்ளிகளின் மாணவர்கள் பாதிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் கேட்டுக் கொண்டால் மட்டுமே இருமொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியும் என்ற கல்வியமைச்சின் விதிமுறை அப்பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதையும் சிவசுப்ரமணியம் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய நிலையில் ஆங்கில மொழியின் பயன்பாடு இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் முழுமையாக போதிக்க கல்வியமைச்சு உறுதிப்படுத்த வேண்டுமென ம.இ.கா ஊடக பிரிவு தலைவருமான எல்.சிவசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.