கோலாலம்பூர், பிப் 21 – மனிதனது பிறப்பாலும் மரபாலும் பின்னிப் பிணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமே தாய்மொழி ஆகும்.
லத்தீன், கீரேக்கம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய உலகச் செம்மொழிகளின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் தமிழ்மொழி, உலகின் மிகத் தொன்மையான மொழி என்று கூறும் போது அதன் பெருமைக்கு அளவே இல்லையென தமது தாய்மொழித் தின வாழ்த்துச் செய்தியில் மஇகாவின் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கூறியுள்ளார்.
தொன்மை, இனிமை, எளிமை என பல சிறப்புகளைக் கொண்டதுதான் நம் தாய்மொழியான தமிழ் மொழி.
கல்வியைத் தாய்மொழியில் பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர் என்பது நிதர்சனமாகும்.
எனவே, சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு நம் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் புதைந்து கிடக்கும் தமிழ் அறிஞர்களின் படைப்பையும் அறிமுகம் செய்வோம் என டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.