
ஈப்போ, அக் 20 – எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஆருடங்கள் அதிகரித்துள்ளன. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொதியின் நடப்பு எம்.பியுமான அன்வார் இன்றிரவு ஈப்போவில் நடைபெறும் பக்காத்தான் ஹரப்பான் மாநாட்டில் தாம் போட்டியிடவிருக்கும் தொகுதியை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தலங்களும் அன்வார் போட்டியிடும் தொகுதி குறித்து பல்வேறு ஆருடங்களை வெளியிட்டு வருகின்றன. இன்றைய பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் உறுப்புக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும் அன்வார் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்வார் தம்புனில் போட்டியிட வேண்டுமென DAP- யும் விரும்புவதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அன்வார் தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பேரா DAP தலைவர் Nga Kor Ming நம்பிக்கை தெரிவித்தார்.
தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் நடப்பு உறுப்பினராக பேஜா எனப்படும் பேராவின் முன்னாள் மந்திரிபுசாரான டத்தோஸ்ரீ Ahmad Faizal Azumu இருந்துவருகிறார். ஷரட்டோன் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து அசுமு பெர்சத்து கட்சிக்கு தாவியதால் 2020 ஆம் ஆண்டு பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்தது.