
கோலாலம்பூர், மே 16- இந்திய சமுதாயத்தின் நலன் கருதி ம.இ.கா மேற்கொள்ளும்
பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ப தரமிக்கக் கற்பித்தல் மூலம் சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டுமென செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் வலியுறுத்தினார். மாநகரில் பல்கலைக்கழகம், மருத்துவமனை நிர்மாணிக்கும் முயற்சியில் ம.இ.கா இறங்கியுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்திருந்தார். ம.இ.கா அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டிருப்பதால் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகையினரின் தியாகம் அளப்பரியது என்றும் நெல்சன் தெரிவித்தார்.
“வளமிக்கப் பள்ளிக்கு ஆசிரியரே ஆணிவேர்” என்ற நிலையில் ஆசிரியர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இன்றைய சூழலில் நாளைய உலகம் எப்படி இருக்கும், எதிர்காலத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களை அவர்களுக்கு கற்றுத்தரும் கடப்பாடும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. அதே வேளையில் கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றால் அந்தக் கல்வியை நமக்குக் கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என டத்தோ நெல்சன் தெரிவித்தார்.