கோலாலம்பூர், மே 10 – தலைநகரில், 30 வயதுக்கு மேற்பட்ட அல்லது 1.5 மீட்டருக்கும் மேல் சுற்றளவை கொண்ட மரங்களை பரிசோதனை செய்ய, குத்தகையாளர்களை, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் நியமித்துள்ளது.
2019-ஆம் ஆண்டு தொடங்கியே அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் வாயிலாக, இதுவரை 175 மரங்கள் அபாயகரமான நிலையில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ள வேளை ; அதில் 147 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஊடகப் பிரிவு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
தலைநகரை சுற்றியுள்ள மரங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் அவ்வப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகக் கடைசியாக, கடந்த பிப்ரவரி மாதம் அந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட 28 மரங்கள், கூடிய விரைவில் வெட்டப்படுமெனவும் அது கூறியுள்ளது.
வேர் பகுதி பலவீனமான நிலையில், பெயர்ந்து விழும் ஆபத்து தென்படும் மரங்களே, அபாயமான சூழலில் இருக்கும் மரங்களாக அடையாளப்படுத்தப்படுமெனவும் அது தெளிவுப்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, தலைநகரில் பெய்த அடை மழையை தொடர்ந்து, மரம் ஒன்று பெயர்ந்து விழுந்ததில், ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளை ; மற்றொருவர் காயமடைந்தார். அச்சம்பவத்தில், 17 வாகனங்கள் சேதமடைத்ததும் குறிப்பிடத்தக்கது.