புத்ராஜெயா, ஆகஸ்ட் -29 – கோலாலம்பூரில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் விலைமாதர்களாக தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட 6 வெளிநாட்டுப் பெண்களை குடிநுழைவுத் துறை காப்பாற்றியது.
மூன்று மாடி கடை வீட்டிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஐவர் வியட்நாமியப் பெண்கள், ஒருவர் தாய்லாந்துப் பெண்.
சட்டப்பூர்வமான வேலை வாங்கித் தருவதாகக் கூறி நம்ப வைக்கப்பட்டு, கடைசியில் இங்கே வந்த கையோடு பாலியல் தொழிலில் ஈடுபட அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இணையம் வாயிலாக அவர்களை விளம்பரப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு அக்கும்பல் சேவை வழங்கி வந்துள்ளது.
ஒரு மணி நேர ‘சேவை’க்கு வாடிக்கையாளர்களுக்கு 240 ரிங்கிட் கட்டணமாகவும், அப்பெண்களுக்கு வெறும் 100 ரிங்கிட்டும் தரப்பட்டு வந்துள்ளது.
அந்த வெளிநாட்டுப் பெண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு காசு பார்த்து வந்த உள்ளூர் ஆடவர் கைதாகியுள்ளார்.