![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-31-Dec-2024-08-56-AM-4453.jpg)
கோலாலம்பூர், டிசம்பர்-31, தலைநகரில் செயல்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பல்களான Geng Awey மற்றும் Geng Alep முறியடிக்கப்பட்டுள்ளன.
அவ்விரு கும்பல்களைச் சேர்ந்த 7 உள்ளூர் ஆடவர்கள் Op Lejang சோதனை நடவடிக்கையில் வெவ்வேறு இடங்களில் கைதாகினர்.
அவர்களில் Geng Awey கும்பலைச் சேர்ந்த 5 ஆடவர்கள் டிசம்பர் 6-ம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாக, வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் லாசீம் இஸ்மாயில் (Mohamad Lazim Ismail) கூறினார்.
விசாரணையில், மொத்தமாக 139,600 ரிங்கிட் இழப்பை உட்படுத்திய 21 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
அவற்றில் 19 சம்பவங்கள் வங்சா மாஜூவிலும், தலா ஒரு சம்பவம் செந்தூலிலும் செராசிலும் பதிவாகியவை.
அக்கும்பல் கோம்பாக் சுற்று வட்டார ஆறுகளில் வீசிய மோட்டார் சைக்கிள் பாகங்களும் தீயணைப்பு-மீட்புத் துறையின் உதவியுடன் மீட்கப்பட்டன.
இவ்வேளையில், டிசம்பர் 17-ல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் Geng Alep-பைச் சேர்ந்த 17 வயது பையன் உள்ளிட்ட இருவர் லெம்பா கெராமாட்டில் சிக்கினர்.
இரு கும்பல்களின் யுக்தியுமே, பூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் கழுத்துப் பகுதியை உடைத்து, அதை திருடிச் செல்வது தான்.
பின்னர் தனித்தனி பாகங்களாகக் கழற்றி அவற்றை 300 ரிங்கிட் முதல் 700 ரிங்கிட் வரை facebook-கில் விற்று அவர்கள் காசு பார்த்து வந்துள்ளனர்.