
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9, தவறுதலாகக் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் 58 வயது போலீஸ்காரருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மாலை 6 மணிக்கு மேல் அங்குள்ள பாதுகாவலர் அறையில் தலையில் காயங்களுடன் அவர் காணப்பட்டதாக, பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்சா அஹ்மாட் கூறினார்.
அந்நபர் வைத்திருந்த கைத்துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா அவரது தலையில் பாய்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
என்றாலும், 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பல்வேறு கோணங்களில் அச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக ஹம்சா சொன்னார்.
காயமடைந்த போலீஸ்காரர் இன்னமும் பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் பொது மக்கள் தேவையற்ற யூகங்களை எழுப்பி விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.