கீவ், பிப் 27 – மூன்றாவது நாளாக உக்ரேன் தலைநகர் கீவ்வின் ( Kyiv) மீதும், தெற்கேயுள்ள ஒடேசா ( Odesa) , வட கிழக்கே உள்ள கார்கிவ் ( Kharkiv) பகுதிகள் மீதும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில் , ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாங்கள் போரிட்டு வருவதாக உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
நாட்டின் மத்திய பகுதியைக் கைப்பற்ற எதிரிகள் முனைகின்றனர். எனினும் அவர்களது முயற்சிகளை தாங்கள் முறியடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கீவ்வை, ரஷ்ய வீரர்கள் நெருங்கி வரும் நிலையில், மக்கள் திங்கட்கிழமை காலை வரையில் பாதுகாப்பான இடங்களிலே இருக்குமாறும் வெளியே வர வேண்டாமெனவும் அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வேளையில் ரஷ்ய ஏகவுகணை வசில்கிவ் ( Vasylkiv ) பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கை தாக்கியிருப்பதாகவும் இதனால் நச்சுவாயு காற்றில் கலக்கலாமென அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி நெதர்லாந்து ஆகிய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வரும் நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன . அவ்வகையில் அனைத்துலக நிதி முறையிலிருந்து தொடர்பை துண்டிக்கும் வகையில் Swift முறையிலிருந்து ரஷ்யாவின் சில வங்கிகளை அகற்ற மேற்கத்திய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் இதுவரை உக்ரேன் தரப்பில் 198 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகாமானோர் அண்டை நாடுகளில் பாதுகாப்பு தேடி அடைக்கலம் பெற்று வருகின்றனர். இவ்வேளையில் ரஷ்யா தமது தரப்பில் ஏற்பட்டிருக்கும் மரண எண்ணிக்கை குறித்த விபரங்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை .