ஈப்போ, பிப் 2 – தாபோங் ஹாஜி எனப்படும் யாத்திரிக நிதி நிர்வாகம் தொடர்பான அரச விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சர் இட்ரிஸ் அகமட் தெரிவித்தார். அரச விசாரணைக் குழு ஜனவரி 26 ஆம் தேதி தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது. அரச விசாரணைக்குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் துறை முழுமையான நம்பிக்கையை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் நாங்கள் தலையிடமாட்டோம் என இட்ரிஸ் அகமட் உறுதியளித்தார். ஈப்போவில் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ந்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். தாபோங் ஹாஜி மீதான அரச விசாரணைக் குழு எந்தவொரு தரப்பினரின் தலையீடு இல்லாமல் சுதந்திரமான அமைப்பாக செயல்படும். மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன் விசாரணையின் முடிவுக்காக பிரதமர்துறை காத்திருக்கும் என்று இட்ரிஸ் அகமட் கூறினார்.