
கோலாலம்பூர், ஏப் 14 – தாப்பாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்
( Nga Kor Ming ) 6.13 மில்லியன் ரிங்கிட் அறிவித்திருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துள்ளார்.
இது ஆயர் குனிங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், நாங்கள் எச்சரிக்கையை வெளியிட வேண்டியிருக்கும் என்பதோடு அந்த ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்காது என்று இன்று புத்ராஜெயாவில் நிதியமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அன்வார் செய்தியாளர்களிடம் கூறியதாக பெர்னாமா மேற்கோள் காட்டியது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவது அல்லது ஒதுக்கீடு செய்வது அனுமதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை, பொது கழிப்பறைகள், உணவு விடுதிகள், சமூக அரங்குகள் மற்றும் LED தெருவிளக்குகள் நிறுவுதல் உள்ளிட்ட தாபாவில் 33 திட்டங்களுக்கு தனது அமைச்சகம் இந்த ஆண்டு 6.13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக Nga Kor Ming கூறினார்.
இந்த அறிவிப்பை மலேசிய சோசலீச கட்சியின் வேட்பாளர் பவானி கே.எஸ் உட்பட சிலர் விமர்சித்தனர். அத்தகைய ஒதுக்கீடுகள் வேறு நேரத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
ஒற்றுமை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதிநிதிக்கப்படும் பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக தொகுதி மக்கள் உணருவதைத் தடுக்க தொகுதிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.காவின் தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் நேற்று கூறியிருந்தார்.
தாப்பாவில் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பிற்காக Nga Kor Ming மின் 6.13 மில்லியன் ரிங்கிட் அறிவித்த நேரம் மிகவும் தாமதமானது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.