ஷா ஆலாம், அக்டோபர்-6, ஷா ஆலாம், செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடா வணிக வளாகங்களில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 602 கள்ளக்குடியேறிகள் கைதாகினர்.
முறையான பயணப் பத்திரம் இல்லாதது, பெர்மிட் விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக, 19 முதல் 53 வயதிலான அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
குடிநுழைவுத் துறை தலைமையில் நடைபெற்ற அச்சோதனைகளில் மொத்தமாக 1,091 வெளிநாட்டவர்கள் விசாரிக்கப்பட்டதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) தெரிவித்தார்.
கைதான அனைவரும் செமஞே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில பாதுகாப்பு மன்றத்தின் கீழ் அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அச்சோதனைகளில், மந்திரி பெசாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குடியேறிகள் மற்றும் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளை மீறிய வெளிநாட்டவர்களுக்கு எதிராக, சிலாங்கூர் முழுவதும் அந்த அதிரடிச் சோதனைகள் தொடரும் என அமிருடின் ஷாரி கூறினார்.