ஷா அலாம், பிப் 10 – தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கூட்டரசு அரசாங்கம் வழங்க ஒப்புக் கொண்ட நிதியான ஆயிரம் ரிங்கிட்டும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் அறிவிப்பு செய்த ஆயிரம் ரிங்கிட்டும் பெரும்பான்மையான மக்களுக்கு இன்று வரையில் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வீ.கணபதிராவ் அவர்களிடம் நிதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு கிள்ளான் மாவட்ட அலுவலகத்தை வலியுறுத்தும்படி தாமான் ஸ்ரீ மூடா ருக்குன் தெதாங்கா பிரிவு A வின் செயலாளரும் மலேசியத் தமிழ் மணி மன்ற தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறார்.
பொருட்கள் வாங்குவதற்கு 2,500. ரிங்கிட் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதும் விபரம் தெரியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பேரிடருக்கு நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை ஆய்வு செய்து தீர்வு காணும்படி மாநில மந்திரி புசாரை ஆட்சிக்குழு உறுப்பினர் வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே வெள்ளத்தினால் அனைத்து உடமைகளையும் இழந்துவிட்ட மக்களுக்கு நிவாரண நிதியை கொடுப்பதில் மாநில அரசாங்கமும் கூட்டரசு அரசாங்கமும் காட்டிவரும் மெத்தனப் போக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தாமான் ஸ்ரீ மூடாவில் பல இடங்களில் கால்வாய்களில் சுமுகமாக நீரோட்டமின்றி தடைபட்டு நிற்கின்றது. குறிப்பாக பள்ளி வாசலை ஒட்டியுள்ள
கால்வாய் உட்பட பல இடங்களில் இதே நிலைதான். இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் கடுமையாக மழை பெய்யும் நாட்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என சு.வை லிங்கம் சுட்டிக்காட்டினார்.