
ஈப்போ, நவ 10 – நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில், தாம் பெரிகாத்தான் நேஷசல் சார்ப்பில் போட்டியிடுவதை தம்பூனிலுள்ள ஆதரவாளர்கள் சிலர் அறிந்திருக்கவில்லை. அதனால் சற்று குழப்பமான சூழல் ஏற்பட்டதாக, பேராக் மாநில பெரிக்காதான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் பைசால் அசுமு தெரிவித்தார்.
தாம் பாக்காத்தான் ஹரப்பான் அல்லது தேசிய முன்னணியை பிரதிநிதித்து களமிறங்குவதாக, தவறான எண்ணிக் கொண்டிருக்கும் சிலரை தாம் சந்திக்க நேர்ந்ததாக, பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான அசுமு சொன்னார்.
“தம்பூனில் ஆதரவு அமோகமாக உள்ளது. எனினும், நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். மக்களை அணுகி நமது முயற்சிகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என அசுமு தெரிவித்தார். “கூட்டத்தின் போது எதிர்கொண்ட பெரிய சவால்களில் ஒன்று, நான் பெரிக்காதான் நேஷனல் சார்ப்பில் போட்டியிடுவதை பலர் அறிந்திருக்கவில்லை என்பதே” எனவும் அசுமு சொன்னார்.
“அவர்கள் எனக்கு ஆதரவு தருகின்றனர். எனினும் பாக்காதான் ஹரப்பானுக்கே ஓட்டு போட போவதாக அவர்கள் கூறுகின்றனர். கடந்த பொதுத் தேர்தலை போல, நான் இன்னமும் பாக்காதான் ஹரப்பானில் தான் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்” என அசுமு குறிப்பிட்டார். அதே போல, டான் ஸ்ரீ முஹிடின் யாசினும் இன்னமும் தேசிய முன்னணியில் இருப்பதாக எண்ணி மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். நடப்பு அரசியல் மாற்றங்கள் குறித்து அறியாமல் இருப்பதே அதற்கு காரணம் என அசுமு சொன்னார்.